Saturday, February 5, 2011

சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள்

சிக்கன்                                _     1/2 கிலோ
பாஸ்மதி அரிசி                _     2 டம்ளர்(அல்லது) அரைபடி
வெங்காயம்                      _     2
தக்காளி                              _     2
பச்சைமிளகாய்                 _    ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது      _    2 தேக்கரண்டி
தயிர்                                     _     2 தேக்கரண்டி  
மஞ்சள் தூள்                       _    1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                   _    1 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா             _     1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள்            _     1 தேக்கரண்டி
பட்டை                                   _    விரல் அளவு 2
ஏலக்காய்                              _     2
கிராம்பு                                   _     2
பிரிஞ்சி இலை(பே லீஃப்)  _     சிறியதாக ஒன்று
எண்ணெய்                             _    100 மிலி
 நெய்                                        _    ஒரு தேக்கரண்டி
மல்லி,புதினா தழை            _  தலா அரை கட்டு
எலுமிச்சை பழம்                   _  ஒன்று

 *** செய்முறை ***


 சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு மூன்று, நான்கு கழுவி விட்டு தண்ணீரை வடிக்கட்டி விட்டு அதனுடன் தயிரையும் ஒரு தேக்கரண்டி உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயையும் கீறி வைத்து கொள்ளவும்.புதினா.மல்லி தழைகளையும் ஆய்ந்து தண்ணியில் போட்டு வைத்து கொள்ளவும்.   
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அரிந்து வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்கி கொள்ளவும். 
 வதங்கிய பின்,மஞ்சள்த்தூள்,மிளகாய்த்தூள்,பிரியாணி மசாலாத்தூள்(பிரியாணி மசாலாவிற்க்கு பதில் அதே அளவில் கரம் மசாலாவையே சேர்த்து கொள்ளலாம்..)எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கி விட்டு பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் நறுக்கி அலசி வைத்திருக்கும் மல்லி,புதினா தழையில் பாதியையும் உப்பு சரி பார்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மிதமான தீயிலேயே வேக விடவும்.

பதினைந்து நிமிடத்தில் நன்கு வெந்து மசாலாவோடு பிரண்டு இருக்கும்.அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
 அரிசியை கழுவி ஊற வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அரிசியை தண்ணீரில்லாமல் வடிக்கட்டி அதில் போட்டு சாதத்திற்க்கு தேவையான உப்பும் சேர்த்து மல்லி ,புதினா தழையில் சிறிதும் சேர்த்து எலுமிச்சை பழம் பிழிந்து வேக விடவும்.( பெரிய பழமாக இருந்தால் புளிப்பு அதிகம் பிடிக்காதவர்கள் பாதியே பிழிந்தால் போதும்)
தண்ணீர் சுண்டுகின்ற நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு சிக்கன் மசாலாவை அதில் சேர்த்து அடி சாதத்தை மேலே கொண்டு பரப்பி அதன் மேல் கரம் மசாலாத்தூளை தூவி ஃபுட் கலரை ஒரு பக்கமாக போட்டு மீதியிருக்கும் நறுக்கிய மல்லி,புதினா தழையையும் தூவி நெய்யை ஊற்றி மூடியில் அலுமினிய ஃபாயிலை போட்டு மூடி அடுப்பில் ஒரு இரும்பு தோசை தவாவையோ.தம் பொடும் ப்ளேட்டையோ போட்டு அதன் மேல் சட்டியை வைத்து மூடியின் மேல் நல்ல வெய்ட் உள்ள பாத்திரம் வைத்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
 பத்து நிமிடம் கழிந்ததும்,மூடியை திறந்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு மறுபடியும் மூடி ஐந்து நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து மூடியை திறக்காமல் அப்படியே விட்டு விடவும்.
விரும்பினால் வெங்காயம் சிறிதையும்,முந்திரியையும் பொன்னிறமாக பொறித்து தூவி பரிமாறலாம்.
 சுவையான சிக்கன் பிரியாணி ரெடி... 


அன்புடன், 
அப்சரா.

Friday, February 4, 2011

பீஸ்,பனீர் குருமா


தேவையான பொருட்கள்

பனீர்                                 _     அரை கப்
 பீஸ்                                  _     ஒரு கப்
 வெங்காயம்                  _      ஒன்று
 தக்காளி                          _      சிறியதாக ஒன்று
 காய்ந்த மிளகாய்         _     2
இஞ்சி,பூண்டு விழுது   _    1 தேக்கரண்டி
 மஞ்சள்த்தூள்                _     1/2 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்              _     1 தேக்கரண்டி
 கறிமசாலாத்தூள்      _      1/2 தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள்       _     1/4 தேக்கரண்டி
 சோம்பு தூள்                   _      1 தேக்கரண்டி
 தேங்காய் பால்பவுடர் _     அரை கப்
எண்ணெய்                         _     4 தேக்கரண்டி
 மல்லி தழை                     _     சிறிதளவு

 *** செய்முறை ***
 பனீரை கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலையை இரண்டு மூன்றாக கிள்ளி போட்டு உடனே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
 பின்பு தூள் வகைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,பீஸையும்,பனீரையும் சேர்த்து மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் விட்டு விடவும்.
 பின்பு ஒன்றரை டம்ளர் தண்ணீரில் தேங்காய் பால் பவுடரை கரைத்து அதில் ஊற்றி தேவையான அளவு உப்பும் மல்லிதழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு ,குறைந்த தீயில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
சிம்பிளாக சீக்கிரமே செய்யகூடிய சுவையான பீஸ்,பனீர் மசாலா ரெடி.
சப்பாத்தி,நாண்,குப்பூஸ் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.

அன்புடன், 
அப்சரா.

Thursday, February 3, 2011

பரோட்டா


பரோட்டா என்றாலே அதை கைய்யாலே விசுறுவது என்பதே சிறப்பு.இதற்க்காகவே சிலர் இதை முயன்று பார்க்க மாட்டார்கள்.எங்கள் வீட்டில் நான் சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே.... வீட்டில் பரோட்டா செய்வது என்றால் என் அப்பா தான்.... மலேஷியாவில் அவரின் இளமைகாலத்தில் ஒரு மிலிட்டிரி ஹோட்டலில் முறையாக கற்று கொண்டு போட்டு கொண்டிருந்தவர்.ரொம்ப சூப்பாராக போடுவாங்க....

 எங்க அப்பா மலேசியாவிலிருந்து வந்துட்டால் அடிக்கடி பரோட்டா போட்டு மாடிக்கு எடுத்து சென்று நிலா சோறு போல நிலா பரோட்டா சாப்பிடுவோம். பயங்கர ஜாலியாக இருக்கும்.என் அப்பா போடும்போதே ரசிச்சு பக்குவமா செய்வார்.... அதை பார்த்து பார்த்து எனக்கும் அதை எப்படியாவது கற்று கொள்ளணும்னு ஆசை வந்துடுச்சு.ஆனால் அப்ப முடியல.... ஆனால் அப்பாட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு இங்கே துபாய் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போட ஆரம்பித்தேன்.ஒரு நேரம் வரும் ஒரு நேரம் சொதப்பிடும்.இப்படியே இருந்தது.
அப்பா இங்கு துபாய்க்கு வந்தும் செய்து கொடுத்தார்.நிறைய டிப்ஸும் சொன்னார்.அதன்படி செய்ய ஆரம்பித்ததும் இப்ப எனக்கு நிறைய பாராட்டுக்கள்..... பலரிடமும்.... அந்த சில டிப்ஸ்களோடு உங்களுக்கு இந்த பரோட்டாவை செய்து காண்பிக்கலாமுன்னு வந்திருக்கின்றேன்.

ஈஸி பரோட்டா என்று அறுசுவையில் சுத்த சைவமாக உள்ளவர்களுக்காகவும்,சுலபமான முறையிலும் செய்து காட்டியுள்ளேன்.  
முட்டை சேர்க்காதவர்கள் கீழ் கொடுத்திருக்கும் லின்க்கில் போய் பார்க்கலாம்.
 
அதன் லின்க் இதோ:-  http://www.arusuvai.com/tamil/node/14477


தேவையான பொருட்கள் 

மைதா                        _          முக்கால் கிலோ
முட்டை                    _           ஒன்று
பால்                              _          ஒன்றரை டம்ளர்
சீனி                                _         மூன்று தேக்கரண்டி
உப்பு                               _          ஒன்றரை தேக்கரண்டி  
 நெய்                              _           மூன்று தேக்கரண்டி
எண்ணெய்                   _           தேவையான அளவு

*** செய்முறை *** 


மாவை கலப்பது என்பதே எனது அப்பா செய்முறையில் வித்தியாசம் இருக்கும்.இது போல் பெரும்பாலும் யாரும் செய்திருக்க மாட்டார்கள்.இம்முறையில் பிணைவதால் ரொம்ப அடித்து பிணைய வேண்டிய அவசியம் இல்லை.நல்ல சாஃப்ட்டாக இருக்கும்.

ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து கொண்டு பாலை ஊற்றி அதில்  முட்டையை உடைத்து ஊற்றி அதிலேயே சீனி,உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கைய்யால் லேசாக அடித்தாற் போல் கலந்து கொள்ளவும்.
பின்பு சலித்து வைத்திருக்கும் மைதா மாவை அதில் சேர்த்து அந்த கலவையோடு பிசறி விடவும்.எல்லா மாவிலும் சேர்ந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டிருக்கவும்.(நான் கொடுத்த அளவிற்க்கு அரை டம்ளர்க்குள்ளாகவே தண்ணீர் செல்லும்.)
போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டிருக்கும் போது கைகளில் மாவு ஒட்டியிராமல் மாவு உருண்டு வந்திருக்கும் போது ஒரு வெள்ளையான மெல்லிய துணியையோ,கர்சீஃபையோ தண்ணீரில் நனைத்து பிளிந்து அந்த மாவை முழுவதும் மூடி பாத்திரத்தையும் மூடி வைத்திருக்க வேண்டும்.
 ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மாவை மறுபடியும் நன்கு பிசைந்தால் சாஃப்ட்டாக இருப்பதை உணரலாம்.இப்போது ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்க தேவையான மாவை பிய்த்து இரண்டு மூன்றாக உள்நோக்கி கட்டை விரல் கொண்டு திணித்து மடிப்பது போல்  செய்து விட்டு உருண்டைகளாக்கி கைய்யில் நெய்யை சிறிது அந்த உருண்டை முழுவதும் தடவவும்.இப்படியே எல்லா மாவையும் உருண்டையாக்கி அதே போல் ஈரத்துணியை கொண்டு  மூடி வைக்கவும்.
இந்த பதத்துடன் பிணைந்து இருக்கும் மாவில் ஒரு மணிநேரத்திலேயே அவசரத்திற்க்கு வார்த்து சுடலாம்.இல்லையென்றால் பொறுமையாக மூன்று மணிநேரம் கழித்து செய்யலாம்.பொதுவாக பரோட்டா மாவு எவ்வளவு நேரம் நன்கு ஊறுகின்றதோ அவ்வளவு சாஃப்ட்டு கொடுக்கும்.
சரி இப்ப ஊறிய மாவை என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்....

 ஒரு பெரிய மரவையை எடுத்து கொண்டு அதை குப்புற வைத்து அதன் முழுவதும் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை அதன் நடுவில் வைத்து கைகளில் எண்ணெயை தொட்டு கொண்டு பரவலாக அழுத்தி கொள்ளவும். பின்பு விசிற தெரிபவர்கள் விசிறலாம். இல்லையென்றால் அதே உருண்டையை சப்பாத்தி உருட்டு கட்டை கொண்டு எவ்வளவு மெல்லியதாக வார்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக இட வேண்டும்.




                     
அதன் பின் இரு விரலால் எண்ணெயை தொட்டு அதில் தெளித்து விட்டு மாவை ஒரு பக்கமாக ஒன்று சேர்த்து சுருட்டி முடிவை மேல் புறம் வைத்து அழுத்தி மேலே எண்ணெய் தொட்டு வைக்கவும்.
இப்படியே எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தோசை தவாவை அடுப்பில் வைத்து (இரும்பு அல்லது இந்தாலியன் தவா இருந்தால் நன்று)சூடு வந்ததும்,முதலில் சுருட்டி வைத்துள்ள உருண்டையை நான்கு விரல்களில் எண்ணெய் தொட்டு கொண்டு சமமாக அழுத்தி விடவும்.மெல்லியதாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.அதை சூடேறிய தோசைகல்லில் போட்டு அடுப்பை மிதமான தனலில் வைக்கவும்.












மாவை பிசைவதற்க்கென்று ஒரு முறையை என் அப்பா சொல்லி கொடுத்தது போல் சுடுவதற்க்கும் ஒரு முறை உண்டு.அதையும் என்ன என்று இங்கு பார்ப்போம்.இப்ப எங்கே விட்டேன்.... ஆ.... தோசைகல்லில் வார்த்த பரோட்டாவை போட்டாச்சா.... அதன் அடி லேசாக சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெய் எடுத்து பரோட்டாவை சுற்றிலும்,மேல் புறமும் ஊற்றவேண்டும்.அப்படியே கொஞ்ச நேரம்விட்டு அடியை லேசாக தூக்கி பார்த்து சிவந்திருந்தால் மட்டுமே திருப்பி போட வேண்டும்.அதன் பின் சிறிது எண்ணெய் சுற்றி ஊற்ற வேண்டும்.இப்ப இந்த பக்கமும் பரவலாக சிவந்ததும் எடுத்து மரவையில் வைத்து (இரு உள்ளங்கைகளுக்கு நடுவே  இருப்பது போல் வைத்து) இரண்டு,மூன்று முறை அடித்து எடுத்து வைக்கவும்.இதே போல் எல்லாவற்றையும் சுட்டு வைக்கவும்.கோழி, கறி குழம்புடன் சூடாக சாப்பிட சும்மா போய்கொண்டே இருக்கும்னா பார்த்துக்கங்களேன்.....  

கவனிக்க:-)) பரோட்டாவை அதிகம் திருப்பி திருப்பி போட்டு சுட்டு எடுக்க கூடாது.மூன்றே திருப்புதான் இருக்க வேண்டும்.அதே போல் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் ஆறினாலும் சாஃப்ட்டாகவே இருக்கும்.பலருக்கும் சுட்ட பரோட்டாவை அடிக்கும் அளவிற்க்கு சூடு தாங்க முடியாது. அவர்கள் அந்த மூடிய ஈரத்துணியை பரோட்டாவின் மேல் வைத்து பிறகு அடிக்கலாம்.

இன்னும் சில டிப்ஸ்:-)) முதன் முறை முயற்ச்சி செய்பவர்கள் ஒரு கப் மாவில் முட்டை இல்லாமல் முயற்ச்சி செய்யலாம்.மூன்று பரோட்டா வரும்.மற்ற பொருட்களை அதற்கேற்றார் போல் போட்டு கொள்ளணும்.அரை கிலோ மாவிற்க்கு ஒன்பது பரோட்டா வரும். முக்கால் கிலோ மாவிற்க்கு பன்னிரண்டு,பதிமூன்று வரும்.ஒரு கிலோவிற்க்கு பதினெட்டு அல்லது இருபது வரும்.
நன்றி...

அன்புடன், 
அப்சரா.

Tuesday, February 1, 2011

அவார்ட்

என்னுடைய இல்லத்திற்க்கு வருகை தந்து, எனது பதிவுகளை பார்வையிட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதம் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்,தோழிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த வலைப்பூவில் காலடி எடுத்து வைத்து ஒரு மாதக்காலம் முடியாத போதிலும்,எனக்கும் அவார்டை தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.....  

*** kaarasaaram *** ரேவா அவர்களும்,
*** Recipe Excavator *** சங்கீத நம்பிராஜன் அவர்களும் ஆவார்.



இது திருமதி.ரேவா அவர்களுக்கும்,
திருமதி.சங்கீதா நம்பிராஜன் அவர்களுக்கும்,
இந்த நன்றி பூங்கொத்தை வழங்குகின்றேன்.

அவர்களுடைய மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு அளித்தமைக்கு நான் மிகவும் மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.இந்த சந்தோஷத்தோடு இந்த அவார்டையும்,அதனோடு சேர்த்து இந்த பூங்கொத்தையும் என் இனிய வலைபகுதி நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இதை பெறுவதற்க்கும்,தருவதற்க்கு முழு தகுதியானவளா என்பது எனக்கு தெரியாது....
ஆனால் இதை நான் பகிர்ந்து கொள்ளும் அனைவரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.பல தகுதி பெற்றவர்களாவர் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் சொல்லி கொள்கிறேன்.
இதோ பெற்று கொள்ளுங்கள்.... 

*** fareejspace ***                               _     திரு . ஃபரீஜ்
***சமையல் அட்டகாசங்கள்*** _    திருமதி.ஜலீலா அக்கா
*** சமைத்து அசத்தலாம் ***       _   திருமதி.ஆசியா அக்கா
*** குட்டி சுவர்க்கம் ***                   _   திருமதி.ஆமினா
*** பயணிக்கும் பாதை ***             _   திருமதி.அஸ்மா
*** சகோதரர்.ஜெய்லானி ***
*** என் பக்கம் ***                              _   திருமதி.அதிரா
*** mahi's  kitchen ***                             _   திருமதி.மஹி
*** எல்லா புகழும்
                  இறைவனுக்கே ***         _   திருமதி.ஸாதிகா அக்கா
*** கலைச்சாரல் ***                          _   திருமதி.மலிக்கா
*** என் சமையல் அறையில் ***  _   திருமதி.கீதா அச்சல் 


           திருமதி.சங்கீதா நம்பிராஜன் அவர்கள் தனக்கு கிடைத்த இந்த அவார்டையும்... என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு இங்கிருக்கும் மற்ற தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி சங்கீதா அவர்களே....

    இன்னும் என்னுடைய அத்துனை தோழிகளுக்கும் 
                     தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
                                            அனைவருக்கும் நன்றிகள் பல...


அன்புடன், 
அப்சரா.

***தவமின்றி வரம்***


 பளப்பளப்பான மின் விளக்கின் வெளிச்சங்கள்.பரபரப்பாக அங்கும்,இங்குமாக நடக்கும் மனிதர்கள்.இவைகளை கண்டாலே கோப,கோபமாக அவளுக்கு வந்தது.அவற்றை எல்லாம் முறைத்து பார்த்த வண்ணம் மண்டபத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்தால் அனு. 
 “இங்க பாருமா அனு ரொம்ப நேரம் கண் விழிச்சிட்டு இருக்க கூடாது. நீ போமா போய் படுத்து தூங்கு.” அப்பாவின் அன்பு கட்டளை வரவே ரூமை நோக்கி  போனாள்.”அட பாவமே….நீ இன்னுமாடீ தூங்காம இருக்க.ஏம்மா லதா இங்க வா எங்கே உன் தோழியை விட்டுட்டு போய்ட்ட.பாரு நாளைக்கு மணப்பெண்ணா உட்கார வேண்டிய பொண்ணு தூங்காம உலாத்திட்டு இருக்கா.தூங்கினாதானே மணமேடையில் முகம் பளிச்சின்னு இருக்கும்.நீ கொஞ்சம் அவளை அழைச்சிட்டு போமா…என்ன….” என்று சொன்ன அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டே லதாவுடன் அனு ரூமுக்கு சென்றாள்.

லதாவும் குரலை உயர்த்தியவளாய்,”ஏண்டி இப்படி இருக்க இன்னும் நீ  உன்னை மாத்திக்க முயற்சி பண்ணவில்லையா….?அம்மா,அப்பாவுக்கு கல்யாண வேலை ஒரு டென்ஷன்னா நீ மூஞ்சை தூக்கி வச்சிகிட்டு நடந்துக்குறது அதை விட அவங்களுக்கு டென்ஷன் தான் டீ அனு.ப்ளீஸ்….புரிஞ்சுக்கோ டீ….”என்று சொன்னவளை “நானும் இதையே தான் சொல்றேன்.இந்த கல்யாணம் என்றாலே எல்லோருக்கும் டென்ஷன் தான்னு.யாரு புரிஞ்சுக்கிறீங்க”என்று சொல்லி அனு மடக்க பார்த்தாள்.

உன்னிடம் சொல்லி சொல்லி எனக்கு அலுத்து போச்சு அனு.மாப்பிள்ளையோட ஃபோட்டோவும் பார்க்க மாட்டேன்னுட்ட,ஃபோன் பேச அவர் கூப்பிட்டா அதையும் மறுத்துட்ட.இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை ஊர்வலம் முடிஞ்சு வருகின்றபோதும் கூப்பிட்டேன்.அப்போதும் வேண்டாம் என்னை விட்டுடுன்னு சொல்லிட்ட.மாப்பிள்ளையை பார்க்க ரொம்ப நல்ல விதமாய் தெரியுது அனு. அவர்ட்ட பேசி கூட பார்த்துட்டேன்.பேச்சும் மற்றவர்களை கவர்வது போல் தெரியுது”என்று சொன்னவளை அனு ஒரு பார்வை பார்த்து விட்டு “சரி நான் படுக்க போறேன் தலை வலிக்குது.நீ படுக்கிறியா என்ன?”என்றாள். “இல்லடீ…நீ நல்லா படுத்து ரெஸ்ட்டு எடு நான் அம்மாட்ட கொஞ்சம் ஃபோன் பேசிட்டு நாளைக்கு மண்டபத்திற்க்கு வருவதற்க்கான வழியையும் அவங்களுக்கு சொல்லிட்டு வரேன்.”என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டவளாய் லதா வெளியேறினாள்.

கதவை தாளிட்டு விட்டு படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.மனது நிறைய யோசனைகளும்,,படப்படப்பும் தான் அலைந்துக் கொண்டிருந்தது.அப்பா அம்மாவிற்க்கு நான்கு பெண் பிள்ளைகள்.அனு கடைக்குட்டி பெண்.எல்லோருக்கும் செல்லம் தான்.அம்மா,அப்பாதான்உலகம் என்றே இருப்பவள்.இதோ இந்த லதா தான் இவளின் சிறுவயது முதற்கொண்டு இருக்கும் உயிர் தோழி.இவர்களை தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள்.பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி போக பயந்தவளாய் அப்பாவிடம் தபால் மூலம் பி.ஏ.படிப்பதாக தெரிவித்தாள்.ஒரு வருடம் கழிந்தபின் தான் உறவுக்காரர் மூலம் சுனாமியாக இந்த கல்யாண வரன் அவள் வாழ்வில் வரவே அன்று கலங்கியவள் தான் அனு.

அவளை சொல்லி ஒன்றுமில்லை.அவளின் அக்காக்கள் மூவரின் கல்யாணமும்,அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையும் பார்த்து கொண்டிருப்பவள்.ஒவ்வோருவரின் திருமணத்திலும் அப்பா படாத கஷ்ட்டமில்லை.அம்மா அழுகாத நாளில்லை.முதல் அக்கா படும் கஷ்ட்டங்கள் கேள்விப்பட்டதுதான்.மற்ற இருவரின் நிலையும் இன்றும் அழுகையும்,போராட்டமாகவும் தான் ஓடி கொண்டிருக்கிறது.அதையெல்லாம் பார்த்து முடிவு பண்ணவள்தான்,என்னால் எனது அப்பாவும் ,அம்மாவும் கல்யாணம் என்ற பேரால் கஷ்ட்டபட கூடாது என்று.ஆனாலும் அப்பா ”பெங்களூரில் வேலை செய்யும் மாப்பிள்ளை,அருமையான சம்பந்தி உங்க பொண்ணுக்கு எது செய்வீர்களோ தெரியாது ஆனால் என் பிள்ளை வரதட்சனையோ,சீரோ ஏதும் கேட்காதேம்மா என்று சொல்லி விட்டான் எனவே நான் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை என்று  முகமலர்ச்சியோடு கூறுகின்றார்.  கொடுத்து வைத்தவள் மா நீ” என்று நிச்சயம் செய்து விட்டு வந்து விட்டார்.அன்று ஆரம்பித்தவள் தான்.ஒழுங்காக சாப்பிடுவதில்லை,தூங்குவதும் இல்லை,சந்தோஷமும் இல்லை.

ஏனோ பேச்சு சத்தம் கேட்டவளாய் நினைவுகள் கலைந்து எழுந்து உட்கார்ந்தாள்.பெரிய அக்காவும் லதாவும் வந்திருந்தார்கள்.கதவை திறந்து விட்டாள். “லதா கொஞ்சம் அனுவை ரெடி பண்ணி விட்டு நீயும் ரெடியாகி விடுமா…நேரம் ஆகிட்டா அப்பா வேற கத்துவார்.நான் இங்கு அடிக்கடி வந்து பார்த்துக்க முடியாது.அப்புறம் என் வீட்டுக்காரரும்,மாமியாரும் என்னை கவனிக்க ஆளேயில்லை ஒருத்தருக்கும் மரியாதையே இல்லை. என்று ஆரம்பித்து விடுவார்கள்.”என்று புலம்பி கொண்டே போய் விட்டால்.


இதோ மணமேடை எல்லா சடங்கு சம்பிரதாயங்களுடன் மாப்பிள்ளை தாலியும் கட்டி விட்டார்.அனுவின் காதில் லதா கிசுகிசுத்தாள்.”இப்பொழுதாவது மாப்பிள்ளையை பாரேன் டீ அனு.”அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்து கொண்டிருந்தாள்.விருந்து உபசரிப்பும்,உற்றார்,உறவினர்,நண்பர்களின் வாழ்த்தும் நல்லபடியாக முடியவே,அனுவின் மாமியார் பெண்ணை அனுப்பிவையுங்க சம்பந்தி என்று சொன்னார்.அனுவிற்க்கோ படபடப்பாக இருந்தது.உடனே அனுவின் அப்பா கைய்யில் வைத்திருந்த பைய்யிலிருந்து பணகட்டை எடுத்து தட்டில் பூ,பழத்துடன் மாப்பிள்ளை,சம்பந்தி அருகில் வந்து நின்று ”என் மூன்று பெண்களுக்கும் நான் அப்போது உள்ள சூழ்நிலையில் ஐம்பதாயிரம் ரொக்க பணமும்,ஐம்பதாயிரத்துக்கு சீரும் செய்தேன்.நீங்கள் கேட்கவில்லையென்றாலும் என் கடைசி பெண்ணுக்கும் அதை சேர்த்து மொத்த பணமாய் இந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து கொடுக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்”என்று நீட்டினார்.இதை கேட்ட அனுவிற்க்கு அப்போது வந்த எரிச்சலுக்கு அளவே இல்லாமல் இருந்தது.பல்லை கடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்க்கும் லதாவை பார்த்து கொண்டிருந்தாள்.

தட்டையை வாங்காமல் மாமனாரின் கைய்யை பிடித்த மாப்பிள்ளை ரமேஷ் “மாமா இதையெல்லாம் கொடுத்தால் தான் உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று நினைக்கிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை அழிச்சிடுங்க.எனக்கு இதையெல்லாம் விட பெரிய சொத்தாக உங்கள் பெண்ணை தந்திருக்கின்றீர்கள் அது போதும் மாமா.ஒரு பொக்கிஷமாக என்னருகில் வைத்து நல்லபடியாக பார்த்து கொள்கிறேன்.இனி அவளுக்கு எல்லாம் நான்தான்.என்னை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்.சரியா….கிளம்பட்டுமா மாமா…அத்தை” என்று சொன்னவரை அப்போதுதான் அனு நிமிர்ந்து பார்த்தாள்.அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.அப்பா,அம்மாவின் முகத்தில் முதன் முதலில் ஆனந்த கண்ணீர் வருவதை பார்த்தாள்.நிச்சயமாக நான் கொடுத்து வைத்தவள்தான்.என்னால் எனது பெற்றோர் வருத்தமோ,கஷ்ட்டமோ படவில்லை.இவர் எனக்கு தவமின்றி கிடைத்த வரம் தான் என்று எண்ணிகொண்டே,எல்லோரிடமும் சொல்லி விடை பெற்று கொண்டு, ஆனந்த கண்ணீர் மல்க கணவரின் கையை இருக பற்றிக் கொண்டு காரில் ஏறினாள்.


அன்புடன்,
அப்சரா.

Monday, January 31, 2011

கை வேலைபாடுகள்

எனக்கு சிறு வயதிலிருந்தே ஏதேனும் புதுமையான விஷயங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வம் உண்டு.ஆனால் ஆளை பார்த்தால் \\\இதெல்லாம் எதுக்கு லாயக்கு/// என்று மற்றவர்கள் நினைப்பது போல் தான் இருப்பேன்.
எதையும் செயல்படுத்த முயன்று பார்க்கவும் மாட்டேன்.சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்.
 திருமணத்திற்க்கு முன்பு இரண்டு வருடங்கள் வீட்டிலேயே பொழுதை கழித்து கொண்டிருக்கும் போது ஏதாவது கை வேலைபாடுகள் செய்து பார்ப்பேன்.சின்ன பொம்மைகளுக்கெல்லாம்... சுடிதார் தைத்து போட்டு பார்ப்பது என்றெல்லாம் என் பொழுதை கழித்து வந்தேன்.
திருமணம் முடிந்து துபாய்க்கு வந்ததும் எனது கணவர்,குழந்தை என்றே சிறிது காலம் சென்ற பின் கடந்த மூன்று வருடங்களாக தான் இந்த கம்ப்யூட்டரோடு உட்கார ஆரம்பித்தேன்.இதன் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடிந்ததோடு அல்லாமல் நமக்கு தெரிந்தவகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளமுடியும் என்றும் உணர்ந்தேன்.அறுசுவை தளத்தில் பலவிதமான கைவேலைபாடுகளை பல தோழிகள் தன் திறமைகளை கொண்டு வெளிபடுத்தி வந்தனர்.
அதனை பார்த்து சிலவற்றை செய்து பார்த்ததுண்டு.அதன் புகைபடம் இங்கே வெளியிடலாம் என்று உள்ளேன்.சொந்த முயற்ச்சி இல்லைதானே...அதற்க்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்கிறீர்களா...?கொஞ்சம் வித்தியாசமாகவும் செய்து பார்த்ததால் வெளியிடுகிறேன்.அதனுடைய செய்முறைக்கான லின்க்கை கீழே கொடுத்துள்ளேன்.அங்கும் சென்று பார்க்கவும். 





இந்த படத்தில் தெரிபவை அறுசுவையில் திருமதி.செண்பகா அவர்கள் செய்து காட்டிய ***அழகிய ஜுவல் பாக்ஸ் *** என்ற கை வேலைபாடை பார்த்து நான் செய்தது.செய்திதாள் பேப்பரை கொண்டு செய்யகூடியவை.
எப்படியெல்லாம் யோசித்து செய்திருக்காங்க... அவங்களை பாராட்டணும்.
செய்ய நேரம் எடுப்பினும் ஆரம்பித்ததும் ஆர்வம் கூடிடுச்சு... எனவே மூன்று விதமாக செய்து பார்த்தாச்சு.

அதன் லின்க்:- http://www.arusuvai.com/tamil/node/14435

இந்த ஐடியாவை கொண்டு வேறு மாதிரி என்ன செய்யலாம் என்று யோசித்த போது அப்போது தோன்றியது..... துபாயில் பிரபலமானதும், உலகபுகழுக்கும் உரிய கட்டிடமான   *** புர்ஜ் கலீஃபா ***    கட்டிடம்... அதை செய்ய இந்த முறை சரியாக இருக்கும் என்றே எண்ணினேன்.செய்தும் பார்த்தேன்.... என்ன கலரிங் தான் கம்ப்ளிட் பண்ண முடியல அதற்க்கு தகுந்த பெய்ண்ட் எனக்கு அருகில் உள்ள இடங்களில் கிடக்கவில்லை.வேறு எங்கேயும் தேடி போய்  வாங்க முடியவில்லை.(எல்லாம் ஒரு அலுப்புதான்னு வச்சிக்கங்க...)என்ன செய்ய செய்தாச்சே..... அப்படியே புக் செல்ஃப் மேலே அமர்ந்திருக்கின்றது.அது உங்கள் பார்வைக்கு....
 
அதன் பிறகு அதே  அறுசுவை  பகுதியில் கவிசிவா என்ற தோழியின் *** களிமண் கொண்டு பூக்கூடை *** என்ற கை வேலைபாடு என்னை மிகவும் கவர்ந்தது.அதற்க்கான பொருட்களும் எனக்கு கிடைத்ததால் செய்து பார்க்க முடிந்தது.குழந்தைகள் விளையாடும் க்ளே கொண்டு செய்யும் வேலை இது.... (என்னா மாதிரி யோசிக்கிறாங்க இல்ல...)அதையும் செய்து பார்த்துடலாமுன்னு அதன் வேளையில் இறங்கிட்டேன்.க்ளேயில் எத்தனை விதமாக விற்க்கிறதுன்னு அப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.அதன் 

படமும்,லின்க்கும்:-







 http://www.arusuvai.com/tamil/node/14404

 இந்த ஐடியாவை கொண்டு வேறு என்ன மாதிரி செய்யலாமுன்னு  யோசித்த போது குருவி கூண்டு போல் செய்து பார்க்கலாமுன்னு தோணுச்சு.... (வாங்கிய க்ளே வீணாக்காம இதையாவது செய்வோமுன்னு தான்...)
 செய்தும் பார்த்தாச்சு.என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.\\\ இதை விட எனக்கு என்ன வேணும்/// கவிசிவாக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
என் குழந்தைகள் அதை பொக்கிஷமாக வச்சி இருக்காங்க.....
இன்னும் நிறைய செய்து பார்க்கணும்,கற்று கோள்ளணும்னு ஆசை.... தையல் கற்று கொள்ளலாமுன்னு தையல் மிசின் வாங்கினேன்.அதில் இப்போதைக்கு கவுண்டமணி சொல்றாமாதிரி.... கிளிஞ்சது... கிளியாதது... ஒட்டு போடுறதுக்கு இப்படிதான் யூஸ் ஆகிட்டு இருக்கு.நிறைய சகோதரிகள் நிறைய விஷயங்களை,திறமைகளை வெளிபடித்தியிருக்காங்க....
அதையும் கூடிய சீக்கிரம் கத்துக்கணும்.

 எனக்கும் ஓரளவிற்க்கு பார்ப்பதையாவது செய்ய வரும்னு என்பதற்க்கு ஊண்றுகோளாக  இருந்த அருசுவைக்கும்,அருசுவை தோழிகளுக்கும் எனது நன்றிகள் பல......

 அடுத்த பகுதியில் எனது மாமியார் அவர்களின் கைவண்ணத்தை வெளியிடலாம் என்றிருக்கின்றேன்.அவர் மிகவும் கலை ஆர்வம் உள்ளவர்.தையல்,பூ வேலைபாடுகள் என அசத்துபவர்.ஃபோட்டோக்களோடு விரைவில் இந்த பகுதியில் மீண்டும் வருகிறேன்.....(இன்ஷாஅல்லாஹ்)


அன்புடன்,
அப்சரா.

Sunday, January 30, 2011

வடா பாவ்


 இந்த பேரை மும்பை பகுதியில் வசித்தவர்கள்,அங்கே போய் வந்தவர்கள் என்று யாரை கேட்டாலும் தெரியாமல் இருக்காது. *** பாவ் பாஜி *** போன்றே இந்த *** வடா பாவ் *** -ம் மும்பையில் மிகவும் பிரபலம்.இதை எனது நெருங்கிய தோழி (மும்பையை சேர்ந்தவர்..)ஒருவரிடம் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை ஒரு சில மாற்றங்களுடன் நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 தேவையான பொருட்கள்
 ரவுண்ட் பன்                          _        4
 உருளைகிழங்கு                  _        2
வெங்காயம்                            _        1
பச்சைமிளகாய்                      _        2
பூண்டு                                       _        2 பல்  
பிரட்                                           _       ஒன்று
கறிவேப்பிலை                       _        ஒரு கொத்து
பெருங்காயத்தூள்                  _        சிறிதளவு
 மஞ்சள்த்தூள்                         _        1/2 தேக்கரண்டி
எண்ணெய்                                _        பொறித்தெடுக்க
*** மாவு கரைசலுக்கு ***
கடலை மாவு                           _      அரை கப்
அரிசி மாவு                                _     2 தேக்கரண்டி
 மிளகாய்த்தூள்                        _    1 தேக்கரண்டி 
 ரெட் ஃபுட் கலர்                         _    சிறிது
பெருங்காயத்தூள்                    _    கால் ஸ்பூன்

 *** செய்முறை ***
உருளைகிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். 
 ஒரு வானலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும்,நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்,பூண்டு மற்றவைகளையும் போட்டு மஞ்சள்த்தூள்,பெருங்காயத்தூளும் சேர்த்து  நன்கு வதக்க வேண்டும்.
வதங்கியபின்,மசித்த கிழங்கையும் ,பிரட்டை நன்கு உதிர்த்து போட்டு,தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி நன்கு சூடேறி ஓரளவிற்க்கு செட்டானதும் இறக்கி ஆறவைக்கவும். 

மாவு கரைக்க கொடுத்த பொருட்களையெல்லாம் ஒன்று சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கொஞ்சம் திக்காக கலந்து வைத்து கொள்ளவும். 
ஆறிய கலவையை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்துகொண்டு தட்டி (பன் அளவிற்க்கு) வைத்துக் கொள்ளவும்.
அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து விடவும். 
பிறகு வானலியில் பொறிப்பதற்க்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,ஃபிரிட்ஜில் வைத்திருப்பதை  எடுத்து  ஒரு வடையை பஜ்ஜி மாவில் மெதுவாக முக்கி இரண்டு பக்கமும் மவில் மூழ்கியதும் எண்ணையில் போடவும்.மாவில் முக்கும்போது கலவை களறாத அளவிற்க்கு பார்த்து கொள்ளவும். 
 ஒவ்வொன்றாக தான் பொறித்தெடுக்க வேண்டும்.நன்கு சிவந்து வந்ததும் எடுத்து விடவும்.
அதற்க்குள் பன்னை இரண்டாக பிளந்து லேசாக பட்டரை உள் பக்கமும்,வெளி பக்கமும் தடவி தவாவில் டோஸ்ட் செய்து வைத்து கொள்ளவும்.
அந்த பன்னிற்க்குள் கெட்ச்சப்புடனோ... மின்ட் சட்னியுடனோ பொறித்தவடையை வைத்து மூடி பறிமாரவும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு குட்டி பன் வாங்கி அதற்கேற்றார் போல் வடை செய்து ஸ்கூலுக்கும் கொடுத்து அனுப்பலாம்.
குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அன்புடன், 
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out