Saturday, March 19, 2011

விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் சில


இந்த குறிப்புகள் திருமணம் முடிந்து இல்லத்தரசி பதவியை ஏற்று கணவருடன் தனியே வாழும் சில இளம்பெண்களுக்கு உரியதாகும்.
திருமணம் முடிந்து இன்றைய சூழலில் வேலையின் காரணமாக வெளி ஊர்களுக்கோ...,வெளிநாடுகளுக்கோ..., மனைவிகளை அழைத்து செல்லும் படி இருந்து வருகின்றது.
சில பெண்கள் ஓரளவு சிறு சிறு சமையல்,மற்றும் கை வேலைகளை கற்று தெரிந்தவர்களாக இருப்பர்.சில பெண்கள் படிப்பை தவிர்த்து வேறு ஏதும் தெரியாது என்ற நிலையில் இருக்கும் பெண்களையும் பார்த்திருக்கின்றேன்.
அவர்களெல்லாம் தனிமையில் எப்படி சமையல் செய்வது? என்பதே தட்டு தடுமாறி வருவார்கள்.அவர்கள் வீட்டிற்க்கு கணவர் நண்பரை அழைத்து வர நினைத்து இருந்தாலோ... ஆசைப்பட்டாலோ... அவ்வளவுதான் அம்மணிக்கு இங்கு படபடக்க ஆரம்பித்துவிடும்.
இப்படியான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் பெண்களை நான் நிறைய பார்த்ததுண்டு.அவர்களுக்கான இந்த சின்ன சின்ன குறிப்புகள்.

1.முதலில் நம் தினசரி வேலைகள் என்னவென்று தீர்மானித்து அதற்க்கேற்ற நேரத்தை கணக்கிட்டு வைத்து கொள்ள வேண்டும்.இந்த நேரத்தில் சமையலை முடிக்கணும்.இந்த நேரத்தில் சுத்தப்படுத்தும்  வேலையை முடிப்பது போன்ற வேலைகளை குறித்து அதையே தினமும் கடைப்பிடித்தால் ஓய்வு நேரங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.
அதே போல் கணவர் வேலையை விட்டு வரும்போது எந்த வேலைகளிலும் ஈடுபடுத்தி கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.முடிந்தவரை சமையலாகட்டும்,சுத்தபடுத்தும் வேலையாகட்டும் முடித்து விட்டு கணவர் வந்ததும் அவருக்கு தேவையானதை செய்வது அவரோடு உட்கார்ந்து பேசுவது என்றே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
அதுவும் குழந்தை என வந்து விட்டால் உடனே அதற்க்கேற்றார் போல் நமது நேரத்தை மாற்றிக் கொள்வது நல்லது.முடிந்தவரை விடியற்காலையிலேயே எழுந்து சமையல் சுத்தபடுத்தும் வேலை ஆகியவற்றை குழந்தை கண்விழிப்பதுக்குள் முடித்துவிட்டால் போதும்.பிறகு நமக்கும் நன்கு குழந்தையை நல்லபடியாக கவனிக்க முடியும்.அவர்களுடன் அழகிய முறையில் நேரத்தை கழிக்க முடியும்.நமக்கும் ஓய்வு அவ்வபோது கிடைக்கும்.

2.அடுத்து, என்றைக்கு வார விடுமுறை  வருகிறதோ..,அதற்க்கு முதல் நாளிலேயே பாத்ரூமை பளீச் என்று சுத்தபடுத்தியும்,வீட்டை சுத்தபடுத்தி மோப் போட்டு வைப்பது போன்ற வேலைகளை முடித்து வைத்தால் இரண்டு நாளோ,ஒரு நாளோ கணவருடன் வெளியில் செல்வது,இல்லை விருந்தினர் வந்தால் சமாளிப்பது போன்றவைகளை சமாளிக்க முடியும்.வெறுமென வீட்டை (குப்பை இருந்தால் )பெருக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

வாரம் ஐந்து நாட்களிலுமே வீட்டை பெருக்கும் போதெல்லாம் ஒரு ஈர ஸ்பாஞ்சினால் சாப்பாடு மேஜை,செண்ட்டர் டேபிள்,கம்ப்யூட்டர் டேபிள் இவற்றையெல்லாம் தூசு தட்டி துடைத்து வைப்பது.கிச்சனில் அடுப்பை அவ்வபோது பளீர் என்று துடைத்து வைப்பது போன்றவைகளை செய்தோமேயானால் கஷ்ட்டம் தெரியாது.எல்லாம் சேர்த்து வைத்து வேலை செய்யும்போதுதான் கஷ்ட்டமாக இருக்கும்.

3.இப்ப சமையலறைக்கு வருவோம்...
சமையலுக்கு தேவையான பொருட்களில் பால்,தயிர்,மோர் இவைகளை தவிர்த்து ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்க்கொருமுறை சாமான்களை வாங்கி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்வது நல்லது.ஒன்று,இரண்டு சாமான்களுக்கெல்லாம் நாம் அலைய வேண்டியது இல்லை.
என்ன பொருட்கள் தீர்கின்றதோ கிச்சனில் ஒரு சிறிய நோட்டோ பேப்பர்களோ வைத்து அவ்வபோது அதில் குறித்து வைத்து கொள்வது நல்லது.அப்போதுதான் எதையும் மறக்காமல் வெளியில் செல்லும்போது நமக்கு வாங்கி வர ஏதுவாக இருக்கும்.
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில முக்கிய சாமான்கள் நம் வீட்டில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அவைகள் தீருவதற்க்கு முன்னதாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.சங்கடபடத்தேவையில்லை.கணவரிடம் நாம் திடீர் திடீரென்று சாமான்கள் சொல்லி அவரையும் டென்ஷன் ஆக்கி,நாமும் டென்ஷன் ஆக வேண்டியிருக்காது இல்லையா?
திடீரென்று யாரும் “இந்த பக்கம் வந்தேன் அப்படியே உங்களை பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன்”என்று வரும் விருந்தினருக்கு வெறும் டீயோடு நிறுத்தாமல் கூட ஏதாவது வைப்பதற்க்கு தயாராக வீட்டில் ஏதேனும் வாங்கி வைத்திருக்க வேண்டும்.அவை பிஸ்கட்டோ,அதுவும் இல்லையென்றால் பழமோ நறுக்கி வைத்தால் கூட போதுமானது.
மிகவும் நெருங்கியவர்கள் எனில்,ஒரு சில நிமிடத்தில் தயார் செய்யும்படி கேசரிக்கு ரவையோ... பஜ்ஜி மிக்ஸோ..,அதிலேயே பக்கோடாவாகவோ,கோதுமை அப்பமோ செய்து வைத்து அவர்களை அசத்திடலாம்.எனவேதான் இந்த மாதிரி பொருட்களெல்லாம் அவசியம் நம் வீடுகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

4.தினசரி சமையலுக்கு இன்றைக்கு இதை சமைக்கலாம் என்று முன்னதாகவே அதாவது முதல் நாளே முடிவு செய்து வைத்துக் கொண்டால் செய்வதற்க்கு எளிதாக இருக்கும்.வேலைக்கு செல்பவர்கள்,அல்லது கணவருக்கு கைய்யில் சாப்பாடு கொடுத்தனுப்புபவர்கள் அந்த வாரத்திற்க்கான ஐந்து சமையலையும் யோசித்து வைத்துக் கொண்டோமேயானால் காலையில் எழுந்ததும் டென்ஷன் இல்லாமல் சமைத்து கொடுத்து அசத்திடலாம்.

இது நமக்கு சரி.... விடுமுறையில்  “நாங்கள் ஒரு நான்கு ஐந்து பேர் வருகின்றோம்”  என விருந்தாளிகள் முன் தகவலை சொல்கிறார்கள் என்றால் எப்படி நம்மை தயார் செய்து கொள்வது?எப்படி சமாளிப்பது?
அல்லது திடீரென்று இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வருகிறேன் என்று சொன்னால் அதற்க்கு பதற்றத்தை தவிர்த்து எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதை பற்றி இன்ஷா அல்லாஹ் மற்றுமொறு பகுதியில் சொல்கிறேன்.


Friday, March 18, 2011

மசால் வடை


இந்த வடையின் செய்முறை எல்லோருக்கும் தெரிந்ததுதானே....? என கேட்கலாம்.ஆனாலும் நன்கு க்ரிஸ்பியாக நிறைய பேருக்கு வருவதில்லை என்று சொல்லி கேட்டிருக்கின்றேன்.கடையில் உள்ளது போல வேணும் என எண்ணுபவர்கள் உண்டு.அதனால் தான் இந்த ரெஸிபியை எனது இல்லத்தில் கொடுக்க நினைத்தேன்.
அது மட்டுமில்லை என்னவருக்கு இந்த வடை மிகவும் பிடித்தமான ஒன்று.சிறு வயதில் இந்த வடையை சாப்பிட ஆசையாக இருந்தால், அம்மாவிடம் போய் “இந்த வடை செய்ய எவ்வளவு அம்மா செலவு ஆகும்?” என்பாராம்.ரொம்.........ப நல்லவரு இல்ல.... மூத்தவர் என்ற பொறுப்பு,பருப்பெல்லாம் அப்பவே வந்துடுச்சாக்கும்னு அவரை பார்த்து சொல்வேன்.ஒவ்வொரு முறையும் நான் இந்த வடை செய்யும்போது எனக்கும்,அவருக்கும் நினைவுக்கு வந்துடும்.எனவே இது எனது இல்லத்தின் ஸ்பெஷல் என்றே கருதுகிறேன்.
சரி இப்ப செய்முறையை பார்ப்போம்.

*** தேவையான பொருட்கள் ***
கடலைபருப்பு                                    _         ஒரு டம்ளர்
சின்ன வெங்காயம்                          _          பத்து 
பூண்டு                                                   _         இரண்டு பல்
காய்ந்த மிளகாய்                               _         இரண்டு
சோம்பு                                                  _         அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய்                                  _          ஒன்று
இஞ்சி                                                    _         சிறிய துண்டு
கறிவேப்பிலை                                   _        ஒரு கொத்து
மல்லி தழை                                        _        சிறிதளவு
எண்ணெய்                                           _        பொறித்தெடுக்க  

*** செய்முறை ***

பருப்பை நன்கு கழுவி விட்டு அரை மணியிலிருந்து ஒரு மணி வரை ஊற வைத்தல் போதுமானது.பிறகு வடிக்கட்டியில் நன்கு நீரை அப்படியே வடியவிடவும்.(கொஞ்சம் கூட தண்ணீரே இல்லாமல் இருக்கணும்).

அதற்க்கிடையில் ஈரத்தன்மையற்ற மிக்ஸியில் காய்ந்த மிளகாய்,சோம்பு,பூண்டை தோல் முழுவதுமாக உரிக்காமல் மெல்லிய தோலோடு கழிவியது என இவை அனைத்தையும்  மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை தோலுரித்து நன்கு கழுவி விட்டு மெல்லியதாக அரிந்து வைத்து கொள்ளவும். அதே  போல் பச்சைமிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை,மல்லிதழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக பருப்பை போட்டு மிக்ஸியை ஒரே தடவையாக ஓட விடாமல் சற்று விட்டு விட்டு ஓடவிட்டு எடுத்தால் கொரகொரப்பாக இருக்கும்.மைய்ய ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.ஒண்ணு ரெண்டு பருப்பு முழுதாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
அதில் அரிந்து  மற்றும் பொடித்து வைத்திருக்கும் அனைத்தையும் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து  கொள்ளவும்.(இதை அப்படியே தயார் நிலையில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சுடலாம்.ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட்டாலும் நன்றாக இருக்கும்.)

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வரும் வரை,இந்த பருப்பு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து வடையாக மெல்லியதாகவும் இல்லாமல் மொத்தமாகவும் இல்லாமல் தட்டி கொள்ளவும்.ஓவராக எண்ணெய் சூடேறாமல் ஓரளவிற்க்கு சூடானதும்,தட்டிய வடைகளை போட்டு மிதமான தீயிலேயே சுட்டு பொன்னிறமாக இருக்கும் நிலையில் எடுக்கவும்.

மொறு மொறுவென்று மணமாக இருக்கும் மசால் வடை தயார்.இது நீண்ட நேரம் க்ரிஸ்பியாகவே இருக்கும்.இதனுடன் முருங்கை கீரை  சிறிது சேர்த்து பிசைந்து சுடலாம்.நன்றாக இருக்கும்.சத்தானதும் கூட....

சூடா டீயோ,காஃபியோ போட்டு ஒரு கைய்யில கப் டீ,ஒரு கைய்யில வடை.இது ஒரு கடி இது ஒரு குடின்னு சாப்பிட்டா ஆஹா.... அதுவும் ஜன்னலில் மழையோ,அல்லது நல்ல குளிரோ இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.நோன்பு கஞ்சிக்கும் செமையாக இருக்கும்.

                                             


Wednesday, March 16, 2011

***பெண் எழுத்து***


பெண் எழுத்துக்கான தொடர் பதிவை எழுத அழைத்த ஸாதிகா அக்கா அவர்களுக்கு முதலில் என் மனம்திறந்து நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைப்பூவில் நான் காலடி எடுத்து வைத்து மூன்று மாதங்களே முடிவடைந்த நிலையில் என்னையும் இது போன்ற தொடர் பதிவுக்கு ஸாதிகா அக்கா அழைத்திருப்பது  நான் செய்த பாக்கியமே....

இதையும் பெண் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்.என்னை அழைத்ததற்க்காக இதை நான் சொல்ல வில்லை.ஒரு விஷயங்களை  ஏதோ ஒரு மூலையில்,எந்தந்த நாடுகளிலோ இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் மனதை விட்டு நம் எண்ணங்களை திறந்து வெளியிட்டும்,பரிமாறியும் கொள்ளும் அளவிற்க்கு நம் எழுத்துக்கள் ஆங்காங்கே பதிவிடபடுவதைதான் சொல்லி பெருமை அடைகின்றேன்.இந்த அளவிற்க்கு கூட நம் பெண்களால் எழுத முடியுமா..?அவள் எண்ணங்களை இவ்வாறெல்லாம் எழுத்தாக்கி வெளியட முடியுமா? என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த வலையுலகம் ஒரு நல்ல சான்று.இதுவே நமக்கு கிடைத்திருக்கும் முன்னேற்றம்,வெற்றி  என்பது எனது ஆழமான கருத்து.


நிச்சயமாக ஆண் எழுத்துக்கும்,பெண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவே.... அதை மறுப்பதற்க்குமில்லை,மாறப்போவதுமில்லை.
ஸாதிகா அக்கா சொன்னது போல் சில வரைமுறைகள்,கட்டுப்பாடுகள், இந்த அளவிற்க்கு எழுதுவதே திகட்டாமல் இருக்கும் என்பது போன்றவை பெண் எழுத்துக்கு நிச்சயம் வேண்டும்.அதுவே அவள் முன்னேற்றத்தோடு என்றென்றும் நிலையாக இருக்க உதவிடும்.

ஆணாக இருப்பினும்,பெண்ணாக இருப்பினும் அவரவர்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்காதவரை அவை சந்தோஷத்தையும்,நன்மையும்  தரும்.அதே போன்று தான் ஒவ்வொரு பெண்ணின் எழுத்து சுதந்திரமும்...   அடுத்தவர்களுக்கு அது ஊக்கமளிப்பவையாகவும், உற்சாகபடுத்துபவையாகவும்,நல்லதொரு எடுத்துக்காட்டாகவுமே அமைய வேண்டுமே தவிர அடுத்தவர்களை பாதிக்காமலும்,முகம் சுளிக்கும் அளவிற்க்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.அதுவே நிலையானது.

ஏன் இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும்?ஆணுக்கு பொருந்தாதா என்றால் ஒரு ஆணின் எழுத்தை விட ஒரு பெண்ணின் எழுத்து அனைவராலும் கூர்ந்து கவனிக்க படுகின்றது.இதுவே இயல்பான நிலை.அதுமட்டுமின்றி அவளின் எழுத்து அவளை கடந்து வருபவர்களுக்கும்,அவளின் சந்ததினருக்கும் அது ஒரு நல் வழிகாட்டுதலாக அமையும்.இன்றைய  கட்டத்தில் அப்படிதான் பல பெண்களின் எழுத்துக்களை பார்க்கின்றோம். பெருமையடைகின்றோம்.இதே போல் நாம் என்றும் ஆழமான எண்ணங்களையும்,கருத்துக்களையும் அழகான வார்த்தைகளோடும்,நடைகளோடும் கொடுத்தோமேயானால்
*** பெண் எழுத்து *** என்றென்றும் பெருமையோடு இன்னும் பல முன்னேற்றங்களை காணும் என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பமும்,என் அன்பான கருத்தும் .

ஸாதிகா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எனக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன் தோழிகளே... இதை பற்றி யாரேனும் பதிவிட விரும்பினால்  எழுதலாம். 

Tuesday, March 15, 2011

மிக்ஸ்டு ஜூஸ்


இப்போது வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது.இனி தண்ணீரும் நிறைய அருந்த வேண்டும்.வெளியே எங்கே சென்றாலுமே நம் கண்கள் தேடுவது ஏதாவது சில்லுனு குடிக்க மாட்டோமா என்பதைதான்.வீட்டில் இருப்பவர்களுக்கும் உடலில் ஏற்படும் வெப்பத்தினால் மிகவும் சோர்வடைந்து விடுவார்கள்.அப்போது ஒரு பன்னிரண்டு மணியளவில் சில்லுன்னு ஒரு ஜூஸோ,மோரோ குடித்தால் ஸ்..ஸ்... சும்மா அப்படி இருக்கும்.ஏதோ ஒரு புத்துணர்வு வந்தது போன்று உணர்வோம்.வேலைகளும் வேகமெடுக்கும்.வயிற்று உபாதைகள்,டாய்லெட் பிரச்சனைகளில் இருந்தும் காத்துக் கொள்ள இது போன்ற ஜூஸ்கள் நல்ல பலனளிக்கும்.அந்த வகையில் நான் முதலில் இந்த மிக்ஸ்டு ஜூஸின் செய்முறையை கொடுத்துள்ளேன்.நிறைய பேருக்கு தெரிந்தாலும் தெரியாதவர்களுக்கு பயன்படுமே...பழங்கள் சாப்பிடாத குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு கூட இது போன்று ஜூஸ் போட்டு கொடுக்கும் போது ம்ம்ம்ம்...யம்மி யம்மி என குடிப்பார்கள்.

சரி போதும்ப்பா மொக்கை.... செய்முறையை சொல்லுங்கன்னு சலித்து அலுத்து போகாம இந்த செய்முறையை பார்த்து ஜூஸ் போட்டு குடிச்சு ஃப்ரஷ்ஷாக ஆயிடுங்க சரியா.... 
 
*** தேவையான பொருட்கள் ***

மாதுளைப்பழம்                         _         ஒன்று
பச்சை அல்லது சிகப்பு ஆப்பிள்  _   ஒன்று
ஆரஞ்சு பழம்                                       _    பெரியதாக ஒன்று
சில்லென்ற பால்                               _    அரை டம்ளர்
சில்லென்ற தண்ணீர்                       _     கால் டம்ளர்
சீனி                                                           _   தேவைக்கேற்ப

*** செய்முறை ***

ஜூஸர் மிக்ஸி ஜாரை எடுத்துக்கங்க.அதில் நன்கு கழுவிய ஆப்பிளை நறுக்கி போட்டுக்கங்க.மாதுளையின் முத்துக்களையும் உதிர்த்து போட்டுக்கங்க.
ஆரஞ்சு சுளைகளையும் உரித்து போட்டுக்கங்க.தேவையான அளவு சீனி அல்லது சீனி சிரப்பையும் சேர்த்து மிக்ஸியை நன்றாக ஓடவிடுங்கள்.
நன்கு அரைப்பட்டதும் பாலையும்,தண்ணீரையும் ஊற்றி நன்கு அடிக்கவும்.பிறகு புளி வடிக்கட்டும் வடியில் (நைசாக இல்லாமல் கொஞ்சம் ரவை போன்ற துளை இருக்கும்.) ஊற்றி வடிக்கட்டவும்.வடிய நேரம் எடுக்கும் என்பதால் ஒரு ஸ்பூனை கொண்டு கலக்கி கொண்டிருந்தால் சீக்கிரம் வடிந்து விடும்.வேண்டுமானால் இன்னும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.  
சுவையான சத்தான மிக்ஸ்டு ஜூஸ் தயார்.இதன் சுவை ரொம்ப நன்றாக இருக்கும்.டயட்டில் இருப்பவர்கள் சீனிக்கு பதில் தேனை சேர்த்துக்கலாம்.சில்லென்று விரும்பாதவர்கள் நார்மலான குளிரில் இருக்கும் பாலையும்,தண்ணீரையும் சேர்க்கவும்.

Monday, March 14, 2011

ஈஸி பாகற்க்காய் பொறியல்



*** தேவையான பொருட்கள் ***
பாகற்க்காய்                                          _      ஒன்று(பெரியதாக)
வெங்காயம்                                          _                 இரண்டு
மிளகாய்த்தூள்                                     _      ஒரு தேக்கரண்டி
எண்ணெய்                                             _    7  தேக்கரண்டி
கறிவேப்பிலை                                    _   ஒரு கொத்து
உப்பு                                                         _  தேவையான அளவு                                                                
*** செய்முறை ***


பாகற்க்காயை சிறியதாக நறுக்கி (ஆறு பாகங்களாய் நீளவாக்கில் அரிந்து அப்புறம் ஒன்று சேர்த்து அரிந்தால் இருக்கும் அளவு) அதை உப்பு சேர்த்து தண்ணீரில் பத்து நிமிடம் வைத்து விட்டு கழுவி நீரை வடிக்கட்டவும்.
வெங்காயத்தையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.கழுவிய பாகற்க்காயையும் சிறிது உப்பும்,மிளகாய்த்தூளும் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் வைத்து விடவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி  சூடு வந்ததும்,பிரட்டிய பாகற்க்காயை போட்டு தண்ணீர் சுண்டி வதங்கிய நிலையில் ஆகும் வரை வைத்து பொறிந்ததும்,எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வானலியில் அந்த எண்ணையிலேயே வெங்காயம்,கறிவேப்பிலையை போட்டு சிறிது அதற்கான உப்பை சேர்த்து  வதக்கவும்.
ஓரளவு வதங்கியதுமே வதக்கிய பாகற்க்காயை போட்டு ஒன்று சேர கிளறி மிதமான தீயிலேயே நன்கு வதங்க விடவும்.நன்கு வதங்கி ஆங்காங்கே மொறுகலாக கூட ஆகும்.அதன் பின் அந்த வானலியை விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
விரும்பியவர்கள் இதில் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி இறக்கலாம்.
சுவையானதொரு ஈஸி பாகற்க்காய் பொறியல் ரெடி.எல்லாவித சாதத்துடனும் சாப்பிட நன்றாக இருக்கும்.பாகற்க்காயை பிடிக்காதவர்கள் கூட இம்முறையில் செய்தால் ருசித்து சாப்பிடுவார்கள்.இது எனது அக்காவின் செய்முறை.இந்த முறையில் நான் சாப்பிடும் வரை நான் பாகற்க்காயை ஒதுக்குபவளாக இருந்தேன்.ஆனால் இன்று எனக்கு மட்டுமே இப்படி செய்து சாப்பிட்டு வருகிறேன்.நீங்களும் செய்து ருசித்து பாருங்களேன்.


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out