Saturday, March 26, 2011

விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் (2-ம்பகுதி)

இதற்க்கு முன் திடீர் விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகளில் பாதியை கொடுத்திருந்தேன்.இனி அவற்றை பதட்டம் எல்லாம் இல்லாமல் நம்மை எப்படி தயார் படுத்திக் கொள்ளலாம் என்று எனக்கு தெரிந்தவற்றை என் அனுபவங்களை கொண்டு எழுதியிருக்கின்றேன்.
 முதல் நாளோ.. அல்லது அதற்க்கு முன்னதாகவோ நம் வீட்டிற்க்கு விருந்தினர் வருவதாக அறிவித்திருந்தால் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்ப்போமா...


1. முதலில் அவர்கள் வரும் நேரம் லன்ச்சோ அல்லது டின்னரோ என்னவெல்லாம் சமைக்கலாம் என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள்.லன்ச் என்றால் நான் வெஜ் விரும்பிகள் என்றால் ஒன்று நெய் சாதம்,கோழி அல்லது கறி குழம்பு,சிக்கன் ஃப்ரை,இனிப்பு வகை,ரைத்தா இவை செய்தாலே போதுமானது.பிரியாணி என்று செய்தால் அதற்க்கு ரைத்தா,சிக்கன் ஃப்ரை அல்லது மட்டன் ஃப்ரை,முட்டை அவித்தது,ஒரு பாயாசமோ இல்லை வேறு ஏதேனும் இனிப்போ என சமைப்பதற்க்கு முடிவு செய்யலாம்.
அதே சைவம் சமைப்பதாக இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம்...?
வெஜ் பிரியாணி,அல்லது வெஜ் புலாவ் வகைகளில் ஒன்று,அதற்க்கு சைட் டிஷ்ஷாக கோபி அல்லது வெஜிடபுள்  மஞ்சூரியன் செய்யலாம்.அதுமட்டுமில்லை அதுகூட கொஞ்சம் ப்ளைன் சாதம்,காரக்குழம்பு,ரசம்,மோர்குழம்பு,ஏதேனும் கூட்டு,பொறியல்,வறுவல்,அப்பளம்,இனிப்பு வகை.இதையெல்லாம் பரிமாற வாழை இலை இருந்தால் அடாடா..... கேட்கவே வேண்டாம் விருந்து அசத்தலான விருந்தாக இருக்கும்.நமக்கும் கொஞ்சம் ப்ளேட் கழுவும் வேலை குறையும் இல்லையா...? 



2.சரி என்னவெல்லாம் செய்ய போறோமுன்னு மெனு எழுதியாச்சு.அடுத்து இன்னொரு பேப்பரில் இதற்க்கு தேவையான பொருட்களில் எதெல்லாம் இல்லையோ என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவற்றை எழுதி வைக்கவும்.எக்ஸ்ட்ராவாக பழங்கள்,பால்,பிஸ்கட்ஸ் இவையெல்லாம் சேர்த்து எழுதி வைத்துக் கொண்டு அதை முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


3.சரி...,இப்ப சாமான்களும் வாங்கியாச்சு... வேறு எந்த வகையில் முன்னேற்பாடாக இருக்கலாம்?முதலில் அசைவ விருந்திற்க்கு பார்ப்போம்...
மட்டன் பிரியாணிக்கோ,சிக்கன் பிரியாணிக்கோ... வெளிநாடுகளில் இருப்பவர்கள் என்றால்  முதல் நாள் மாலையிலேயே வாங்கி விடலாம் அல்லவா... எனவே அவற்றை வாங்கி வந்த உடனேயே சிறிது அலுப்பு பார்க்காமல் சுத்தம் செய்து நன்கு கழுவி விட்டு பிரியாணி, குழம்பு என்றால் அதற்க்கேற்றார் போல் உப்பு,தயிர்,சிறிது இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு பிரட்டி ஃப்ரீஜரில் வைத்து விடலாம்.இதை மேரினட் என்பார்கள்.சிக்கன் ஃப்ரைக்கும் இதே போல் அதற்க்கான அனைத்து மசாலாக்களையும் போட்டு நன்கு பிரட்டி வைத்து விடலாம்.மறுநாள் பொறித்தெடுப்பது மட்டும் தான் செய்ய வேண்டும்.இப்படி செய்வதனால் வேலையும் சுலபமாகும்.சிக்கன்,மட்டனில் நன்கு உப்பு ஏறி டேஸ்ட் கொடுக்கும்.மட்டனும் சீக்கிரம் வெந்து விடும்.எனவே இப்படி செய்வது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.மறுநாள் விடியற்காலையில் (ஐந்து மணியளவில்) வெளியில் எடுத்து அப்படியே வைத்து விட்டோமேயானால் நாம் சமைக்கும் நேரத்திற்க்கேற்றார் போல் சில் விட்டு ரெடியாக இருக்கும்.பழசாகிவிடுமோ என்று யாரும் எண்ணி பயப்படவேண்டாம்.

4.சைவம் சமைப்பவர்களுக்கு சொல்லலையேன்னு முறைக்ககூடாது.இதோ அதை சொல்லதான் வருகிறேன்.வெங்காயம்,தக்காளி இவைகளை தவிர்த்து மற்றவைகளை பொறியலுக்கு ஏற்றபடியும்,கூட்டுக்கு ஏற்றபடியும் நறுக்கி ஒரு மூடி போட்ட டப்பாவிலோ... ஜிப் பேக்கிலோ போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.கீரையையும் பழுத்தது,காய்ந்தது என எல்லாம்  நீக்கி காம்பு,வேர் எல்லாம் கிள்ளி ஒரு  பேப்பரில் சுற்றி வைத்து கொண்டோமேயானால் காலையில் எடுத்து நறுக்கி கழுவி சமைக்க ஏதுவாக இருக்கும்.
இனிப்புக்கு செய்பவற்றில் குலோப்ஜாமூனாகவோ.., பாதாம் கீராகவோ இருந்தால் அதையும் முதல் நாள் மாலையே செய்து வைத்து விடலாம்.கீரை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.குலோப்ஜாமுனை வைக்க தேவையில்லை. வடை ஏதும் செய்வதாக இருந்தால் அவற்றிற்க்கு தேவையான மாவையும் முதல் நாளே அரைத்து ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
என்னடா எல்லாவற்றையும் இப்படி சொல்கிறாளே என்கிறீர்களா...? இதெல்லாம் உங்கள் பதற்றத்தையும்,அதனால் ஏற்படும் சில சிறு சிறு  சொதப்பல்களையும் தவிர்ப்பதற்க்காகதான்.ஓரளவு எல்லா வேலையும் சும்மா கை வந்த கலையாகவும்,நல்ல அனுபவமும் வந்து விட்டால் அப்புறம் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.அப்படி செய்யவும் மாட்டீர்கள்.
சரி எப்ப எங்கே விட்டேன்.??? ஆ.......இவையெல்லாம் முதல் நாள் தயார் படுத்தி கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா?இப்ப அடுத்ததாக விருந்து அன்று செய்ய வேண்டியது....

5.காலையில் எழுந்ததும் அல்லது முதல் நாள் இரவிலேயே கூட எதை எதை செய்ய போகிறோம் என்பதை எழுதி கொள்வது போல் முதலில் செய்ய வேண்டிய சமையல்,இரண்டாவதாக செய்ய வேண்டிய சமையல்,மூன்றாவதாக செய்ய வேண்டியது என குறித்து வைத்துக் கொள்ளலாம்.அதன் பின் சமைக்க ஆரம்பிக்கும் போது கிடு கிடுன்னு வேலை நடந்து விடும்.கீழிருந்து மேல் என்பது போல் இனிப்பு என முதலில் செய்ய ஆரம்பித்து கூட்டு,பொறியல் சைட் அயிட்டம் என செய்து குழம்பு என கடைசியாக சுட சுட சாதம்,அப்பளம் வடை என செய்முறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
பிரியாணி,புலாவ் எல்லாவற்றிற்க்குமே அப்படித்தான்.



6.மைக்ரோவேவ் இருந்தால் விருந்தன்று காலையிலேயே கொஞ்சம் சீக்கிரமே சமையலை முடித்து வைத்தால் கூட சாப்பிடுவதற்க்கு முன் சூடு படுத்துவதற்க்கு ஏதுவான  பாத்திரத்தில் சமைத்தவைகளை எடுத்து வைத்து மூடி வைக்கலாம்.அப்படியே சூடு செய்து அப்படியே பரிமாற வைத்து விடலாம் அல்லவா..?வெறும் பிரியாணியே நிறைய செய்து இருப்பின் அவை அதே தம் போட்ட பாத்திரத்திலேயே இருப்பது நல்லது.சுவையும்,மணமும் மாறாமல் இருக்கும்.

7. சரி இப்ப சமைத்தும் முடித்தாகி விட்டது.இனி சின்க்கில் எந்த ஒரு சிறு பாத்திரமும் இல்லாதவாறு க்ளீன் செய்து,அடுப்பையும் சமைத்த தடம் இல்லாமல் சுத்தம் செய்து கிச்சனை பளீர் என்று சுத்த படுத்தி வைத்தோமேயானால் லேடீஸ் யாரும் வருவதாக இருப்பின் அவர்கள் கிச்சனில் நுழையும் போது முகம் சுழிக்காத வண்ணம் இருக்கும்.வீட்டின்  மற்ற இடங்களையும் கொஞ்சம் க்ளீன் செய்து வைத்து கொள்ளலாம்.இவையெல்லாம் சீக்கிரம் சமையலை முடித்தால் பிறகு ரிலாக்ஸாக செய்து விடலாம்.அதுவும் நான் முன்பு சொன்னது போன்று அவ்வபோது வீட்டை நாம்  சுத்தப்படுத்தி கொண்டோமேயானால் மிகவும் கஷ்ட்டபடத் தேவையில்லை.இல்லையென்றால் காலையிலேயே தூங்கும் கணவரையும் எழுப்பி உட்கார வைத்து விட்டு மாங்கு மாங்கு என துடைக்க வேண்டி வரும்.இவற்றையெல்லாம் தவிர்க்கலாம் அல்லவா...? 

8.இவையெல்லாமே.... முன் தகவலாக சொல்லி வரும் விருந்திற்க்கு தயார்படுத்தும் குறிப்புகள்.திடீரென வருகிறேன் என அன்றைக்கு காலையில் சொல்லும் போதோ..,இல்லை வந்தும் விடுகிறார்கள் அப்போது என்ன செய்வது?அவற்றிற்க்கும் நம்மை தயார் படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.விடுமுறை நாட்களில் யாரும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். அதற்க்குதான் ஒரு சில முக்கிய சாமன்களை நாம் எப்போதும் வீட்டில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.ஒரு சாதம்,குழம்பு,ஒரு கூட்டோ அல்லது பொறியலோ செய்து வைக்கும் அளவிற்க்கு நம்மிடம் சாமான்கள் இருந்து கொண்டிருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.பலவகை செய்து வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.ஒன்றிரண்டு என திடீரென்று செய்தாலும் பக்குவமாக செய்தோமேயானால் அப்போது உங்களுக்கு கிடைக்கும் பேர் தான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.மனதிற்க்கு திருப்தியாகவும் இருக்கும்.எனவே பதட்டம் இருந்தாலும் அவை வெளியில் தெரியாதவாறு நடந்து கொள்வது அவசியமாகும்.

இப்போது இதற்க்கு முன் மற்றும் மேற்சொன்ன அனைத்துமே என் வாழ்வில் நான் செய்த செய்து கொண்டிருப்பதும்,ஒரு சில விஷயங்களை பலரிடம் பார்த்து கற்று கொண்ட அனுபவங்களும் ஆகும்.இது ஒரு சிலருக்கு உபயோகப்படும் என்றே பகிர்ந்து கொள்கிறேன்.... ம்ம்ம்.... ஓரளவாவது பயன்பெறும்னு நினைக்கிறேன்.(இப்படியெல்லாம் கஷ்ட்டபட்டு ப்ளான் போட்டு செய்யும் வேலைக்கு பலன் இல்லாமல் போகுமா என்னா..?நிச்சயம் ஆஹா...ஒஹோ..ன்னு பாராட்டு உங்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தும்...)

போய் வர்றேனுங்க.....






Tuesday, March 22, 2011

திடீர் இட்லி சாம்பார்

நாம் எங்கேயாவது வெளியே போய் விட்டு வரும்போதோ... அல்லது திடீர் விருந்தாளிகள் இரவு வந்திருக்கின்றார்கள் என்றோ இருக்கும் சூழ்நிலையில் இட்லி மாவோ...,அல்லது மாவுதான் கடையில் விற்க்குமே உடனே அதை வாங்கியோ இரண்டு முறையாக இட்லியை வேக வைத்து எடுப்பதற்க்குள் இந்த சாம்பாரை செய்து, கூடவே ஒரு தேங்காய் சட்னியும் செய்து வைத்து விடலாம்.இங்கு நான் செய்து காட்டியிருக்கும் முறை  அந்த கால செய்முறையாகும்.அதிக நபர்கள் உள்ள கூட்டு குடும்பமாக அப்போதெல்லாம் வாழ்ந்து வந்ததால் சாம்பாரை நீட்டி வைக்க  இப்படி செய்திருக்கின்றார்கள். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


*** தேவையான பொருட்கள் ***
 பாசி பருப்பு                              _      ஒரு கப்
சிறிய வெங்காயம்                 _       15
தக்காளி       ( பெரியதாக )    _     ஒன்று
பச்சை மிளகாய்                      _      ஒன்று
மிளகாய்த்தூள்                       _      இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்                         _       ஒரு தேக்கரண்டி
மல்லிதழை                            _        சிறிதளவு
இட்லி மாவு                             _       இரண்டு மேசைக்கரண்டி

*** தாளிக்க ***
எண்ணெய்                               _         4 தேக்கரண்டி
கடுகு                                         _          ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்                   _          இரண்டு
கறிவேப்பிலை                       _         ஒரு கொத்து
பெருஞ்சீரகம்( சோம்பு )        _         கால் தேக்கரண்டி   

*** செய்முறை ***

பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்த்தூள், பாதி மிள்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சிம்மிலேயே வைத்துக் கொண்டு கொதி வருவதற்க்குள்ளாக வெங்காயத்தையும் உரித்து விட்டு கழுவி நீளவாக்கில் அரிந்து அதில் பாதியையும்,தக்காளியையும் பொடியாக அரிந்தும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.(அவசரம் இல்லையெனில் பாத்திரத்திலேயே வேகவிடலாம்.)

பிறகு குக்கரை திறந்து அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.அதற்க்கிடையில் சோம்பை ஒன்றிரண்டுமாக நுணுக்கியும்,இட்லி மாவை சிறிது தண்ணீரில் கரைத்தும் வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து  மீதி அரிந்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிவிடவும்.பிறகு மீதி மிளகாய்த்தூளையும் சேர்த்து தாளித்து சாம்பாரை ஊற்றவும்.

பின்பு கரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி கலக்கி விட்டு ,மல்லி தழையை அறிந்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

இட்லி,தோசைக்கு  இந்த சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும்.



       

Monday, March 21, 2011

வெங்காய அடை


*** தேவையான பொருட்கள் ***
பச்சரிசி             _    ஒரு டம்ளர்
முட்டை            _    ஒன்று
சோம்பு             _    ஒரு ஸ்பூன்
தேங்காய்த்துருவல்   _    கால் கப்
சின்னவெங்காயம்    _    15
பச்சைமிளகாய்      _    ஒன்று
சீனீ                _    ஒரு ஸ்பூன்
சமையல் சோடா உப்பு _    2 சிட்டிகை
நெய் (அல்லது)எண்ணெய் _     சுடுவதற்க்கு
உப்பு                    _    தேவையான அளவு

*** செய்முறை ***

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு கழுவி விட்டு கால் மணிநேரம் ஊற வைத்து,பின்பு தண்ணீர் இல்லாமல் வடிக்கவும்.
ஒரு வெள்ளைத்துணியிலோ,மரவையிலோ பரவலாக தடவி விட்டு நன்கு உலரவிடவும்.

நன்கு உலர்ந்ததும்,சோம்பு சேர்த்து மிக்ஸியில் ரவைக்கும் கொஞ்சம் பெரியதாக  பொடித்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய் துருவலை ஒரு சுற்று ஓடவிட்டு பின் உரித்து கழுவி வைத்திருக்கும் வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொடித்த அரிசியுடன் அரைத்தவை,சீனீ,உப்பு,சோடா உப்பு மற்றும் முட்டை உடைத்து ஊற்றி நன்கு பிணைந்து கொள்ளவும்.(அரைத்த விழுதின் தண்ணீரே போதுமானது.இல்லையெனில் கொஞ்சமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்)

பத்து நிமிடம் கழித்து தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் நெய் ஒரு ஸ்பூன் நிறைய ஊற்றி பின் கை நிறைய மாவை உருட்டினாற்போல் எடுத்து அடையாக அரை இன்ச் அளவு தட்டவும்.

மிதமான தீயிலேயே வேக விடவும்.அடி சிவந்ததும் மெதுவாக திருப்பி விட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேக விடவும்.நன்கு பரவலாக சிவந்ததும் எடுத்து விடவும்.
மாலை நேரத்தில் சுடசுட சாப்பிட மொறு மொறுவென்று மிகவும் நன்றாக இருக்கும்.

பாதி நெய் பாதி தேங்காய் எண்ணெய் என கலந்து சுட்டால் அடை நல்ல மணமாக இருக்கும்.கறி,கோழி குழம்பிலும் இதை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Sunday, March 20, 2011

தேங்காய் பால் கட்டு சாதம்


*** தேவையான பொருட்கள் ***

புழுங்கல் அரிசி         _       ஒரு டம்ளர்
தேங்காய் பால்           _       அரை டம்ளர்
புளி                                 _       சிறிய எலுமிச்சை அளவு

*** தாளிக்க ***
கடுகு                             _         ஒரு ஸ்பூன்
உளுந்து                        _         ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்       _         இரண்டு
கறிவேப்பிலை          _          ஒரு கொத்து
மஞ்சள்த்தூள்             _          அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்     _          கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்        _         5 தேக்கரண்டி

*** செய்முறை ***


புளியை கழுவி விட்டு ஊறவைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் சாதமாக சமைத்து வைத்துக் கொள்ளவும்.புழுங்கல் அரிசியை ஒரு அரை மணிநேரம் ஊறவைத்து எப்போதும் சமைத்தால் சாதம் வெண்மையாகவும்,நன்றாகவும் இருக்கும்.

புளியில் தேங்காய் பாலை சிறிது சிறிதாக ஊற்றியே இரண்டு மூன்று முறை கரைத்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.(வேறு தண்ணீர் சேர்க்க கூடாது)

ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கடுகு,உளுந்தம்பருப்பு போட்டு பொறிந்ததும்,கய்ந்தமிளகாயை இரண்டு மூன்றாக கிள்ளி சேர்த்தும்,பின் பெருங்காயத்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து பின் கறிவேப்பிலையும் போட்டு அதில் கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி அதற்க்கு தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.



பிறகு அதை நன்கு கொதிக்க விடவும்.ஒரளவு கொதித்து  சாதத்தில் பிரட்டும் அளவிற்க்கு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிறகு அதை சாதத்தில் ஊற்றி நன்கு எல்லா பக்கமும் படுமாறு கிளறி வைக்கவும்.

சுவையானதொரு தேங்காயப்பால் கட்டு சாதம் தயார்.
நன்கு கொதிக்க விட்டு சாதத்தை கிளறுவதால் ஒரு நாள் முழுக்க கெடாமல் அப்படியே இருக்கும்.எந்த நீண்ட வெளியூர் பயணத்திற்க்கும் எடுத்து செல்லலாம்.
இதற்க்கு தொட்டு கொள்ள உருளை வறுவல்,வாழைக்காய் வறுவல்,முட்டை க்ரேவி இவையல்லாம் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.






Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out