Saturday, October 22, 2011

பொன்னாங்கன்னி கீரை சார்

என்னதான் காலங்கள் மாறி,உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும்,நம்ம பாரம்பர்ய கை மணத்திற்க்கான சுவையே தனிதான்.சுவை மட்டும் அல்லாது உடம்பிற்க்கும் நல்லதொரு பலனை தரக்கூடியதாக இருக்கும்.
அதுவும் எங்கள் ஊர் கிராம பகுதிகளில் நிறைய சின்ன சின்ன சமையல்களெல்லாம் கை வைத்தியம் நிறைந்ததாக இருக்கும்.அவற்றில் ஒன்றை தான் இந்த குறிப்பாக வெளியிடுகிறேன்.




தேவையான பொருட்கள்


பொன்னாங்கன்னி கீரை --------------- நான்கு கைய்யளவு
முருங்கை கீரை இலை --------------    இரண்டு கப்
கெட்டி தேங்காய் பால் --------------- ஒரு டம்ளர்
அரிசி கழநீர்   ---------------------------- இரண்டு டம்ளர்
சின்ன வெங்காயம் -------------------- அரை கப்
பச்சைமிளகாய் ------------------------- இரண்டு
சீரகம் -------------------------------------- அரை ஸ்பூன்
உப்பு   -------------------------------------- தேவைக்கேற்ப  


செய்முறை


பொன்னாங்கன்னி கீரையை நல்ல இலைகளாக பார்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்.


அரிசி கழநீர் என்பது சாப்பாடு சமைக்கும் அரிசியை நல்ல தண்ணீர் ஊற்றி கலைந்து அந்த தண்ணீரை இருத்து தனியே வைத்துக் கொள்வதற்க்கு பெயர் தான்.இந்த தண்ணீரில் தூசு ஏதும் இருப்பின் வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.திக்காக இருக்கும்.இது ஒரு தனி மணம் கொடுக்கும்.


பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.


இப்போது அந்த தண்ணீரை (நாம் சொன்ன அளவு) ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் சீரகம்,பச்சைமிளகாய்,வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து விடவும்.
இரண்டு கொதி தள தளவென கொதித்ததும்,அதில் அலசி வைத்திருக்கும் பொன்னாங்கன்னி கீரையை போட்டு வேக விடவும்.


நன்கு கொதித்து பாதியளவு வெந்து கொண்டிருக்கும்போதே முருங்கை இலையையும் சேர்த்து கொதிக்க விடவும்.


இரண்டும் வெந்ததும்(கைய்யால் மசித்து பார்த்தால் தெரிந்து விடும்) அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் விட்டு கலக்கி மூடி வைத்து விடவும்.
மிகவும் சுவையான சத்தான கீரை சார் ரெடி.


இது அல்சர் போன்ற வயிற்று புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது.நல்ல பலன் கிடைக்கும். சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
தேங்காய் பால் வேண்டாம் என நினைப்பவர்கள் வெறுமெனவே சாராக சாப்பிடலாம்.ஆனால் தேங்காய்பாலும் வயிற்று,வாய் புண் உள்ளவர்களுக்கு நல்லதே....பொன்னாங்கன்னியும்,சரி முருங்கை கீரையும் சரி உடம்பிற்க்கு மிகவும் சத்தானது.மருத்துவ குணம் கொண்டது.
ஒரு வயது குழந்தைகள் முதற்க் கொண்டு வயதானவர்கள் வரை சாதத்தில் ஊற்றி சாப்பிட உகந்தது.
வெறும் முருங்கை இலை, மணத்தக்காளி இலையிலும் இதே போன்று செய்யலாம்.


***நீங்களும் முயன்று செய்து பார்த்துட்டு சொல்லுங்களேன்.இதற்க்கு தொட்டுக் கொள்ள சுருக்கென்று ஒரு மருத்துவமிக்க துவையல் இருந்தால் எப்படி இருக்கும்.....?நல்லாயிருக்குமுல்ல.... இதோ அடுத்து அந்த குறிப்போடு வருகிறேன்.



Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out