Thursday, January 10, 2013

சிங்கப்பூரில் என்னை கவர்ந்த விஷயம்…..



நான் இங்கே சிங்கப்பூர் வந்து தெரிந்து கொண்ட ஒரு நல்ல விஷயம்,இங்கு இருக்கும் சில பள்ளிவாசல்களில் நிறைய இஸ்லாமிய வகுப்புகள் நடைப்பெற்றுவருவதுதான்.நான் இதற்க்கு முன் துபாயில் இருந்து வந்ததால் அங்கே நாம் தனியாக இஸ்லாமிய வகுப்பு என்று போய் கொண்டிருக்க தேவையில்லை.ஏனென்றால் அங்கே எல்லா பள்ளிக்கூடங்களிலுமே கட்டாயம் இஸ்லாமிய வகுப்புகள் இருக்கும்.அதிலேயே ஹதீஸ்கள்,நம் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் என அனைத்து விஷயங்களையும் சொல்லிதந்துவிடுவார்கள்.வீட்டிலும் பிள்ளைகள் வந்து நம்மோடு கலந்துரையாடி சின்ன சின்ன சந்தேகங்களையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நல்லபடியாக தொழுகையோடு நடைமுறைபடுத்தி வருவார்கள்.என் மூத்த பையனும் அப்படித்தான் மிகுந்த ஆர்வத்தோடு ஓதியப்படியும்,சூரா மனப்பாடம் செய்துக் கொண்டும்,தொழுது கொண்டும் இருந்து வந்தான்.அப்புறம் ஒன்றரை வருடங்கள் நம் ஊரில் நாட்கள் சென்றுவிட்டன.அங்கு அப்படியே நிறைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது.இஸ்லாமிய பாடத்தின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தும் போனது என்றே சொல்லலாம்.

இப்போது சிங்கப்பூரில் நாம் எப்படி பிள்ளைகளுக்கு பழையப்படி கொண்டுவருவது என்ற யோசனையிலேயே (ஏன் கவலை என்று கூட சொல்லலாம்)இந்த நாட்டிற்கு வந்தோம்.ஏனென்ன்றால் கலாச்சார சீரழிவு என்பது எந்த மாதிரி சூழ்நிலைகளிலும் ஏற்படுகின்றது.அவற்றிலிருந்து நம் பிள்ளைகளை மீட்டு கொண்டு வருவது என்பது மிக பெரிய விஷயம்.அதற்க்காக தான் அவர்களின் பிஞ்சு பருவத்திலேயே மார்க்கத்தினை பற்றி சொல்லி அவர்கள் மனதில் நல்லவை எது? கெட்டவை எது?என மார்க்க அடிப்படையில் பிரித்து பார்த்து செயல்பட பழக்கிவிட்டோமேயானால் அல்ஹம்துலில்லாஹ் அவர்களை தீயவைகளை விட்டு பாதுகாத்து விடலாம்.அதே சமயத்தில் நாம் என்னதான் வீட்டிலேயே சொல்லி கொடுத்தாலுமே…அதை ஆழமாக செயல்படுத்துவதற்க்கு உஸ்தாத் என்பவரின் பார்வையில் நடைப்பெறும் இஸ்லாமிய வகுப்பு மிகவும் சிறந்ததாக இருக்கும் என எனக்கும்,என்னவருக்கும் தோன்றியது….
அப்படிப்பட்ட ஒரு நல்ல விஷயத்தைதான் இந்த சிங்கப்பூரில் மிகவும் சிறந்த முறையில் வாராந்திர வகுப்பு நடத்திக் கொண்டு வருவதை பார்த்தோம்.மனதிற்க்கு ஒரு சந்தோஷம்,ஆறுதல்.அப்படி என்னவெல்லாம் ஒரு நாளில் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா..?அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.


வாரத்திற்க்கு ஒரு முறை சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை இரண்டு மணிநேரம் வகுப்பு நடைப்பெறுகின்றது.அதில் அரபு எழுத்துக்களை சொல்லி கொடுப்பது முதல் உச்சரிப்பு பிழையினை திருத்தம் செய்வது வரை அனைத்தையும் சொல்லித்தருகின்றார்கள்.அதுமட்டும் அல்லாது,அன்றாடம் பயன்படுத்த வேண்டிய சூரா முதல் குர்ஆன் ஆயத்துகளையும் மனபாடம் செய்ய ஆர்வமூட்டுகிறார்கள்.மற்றுமொரு சிறப்பு என்னவெனில்,ஒரு மாத விடுமுறை காலங்களில் மூன்று நாட்கள் கேம்ப் நடத்தி வருகிறார்கள்.இதில் பண்ணிரண்டு வயதும்,அதற்க்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளும் கலந்து கொள்ளலாம்.(இன்ஷா அல்லாஹ் என் மகனை அடுத்த விடுமுறையில் நடக்கவிருப்பதில் கலந்துக் கொள்ள செய்யணும்)ஆண்குழந்தைகள் இரவு,பகலாக தங்குவது எனவும் பெண்பிள்ளைகள் அந்த கேம்ப் நடக்கும் மூன்று நாளும் காலை எட்டு மணியளவில் வந்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புகின்ற முறையிலும் சிறப்பாக நடத்திவருகின்றார்கள்.இதற்க்காக அக்குழந்தைகளுக்கு சாப்பாடு தருவதற்க்காக ஒரு சிறு தொகையை கணக்கிட்டு பெற்றுகொள்கிறார்கள். இவையெல்லாம் மஸ்ஜிதில் தான் நடைப்பெறுகின்றது.அந்த கேம்ப்பில் தஹஜ்ஜத் தொழுகையை அவசியம் தொழச்செய்து,அதன் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறார்கள். எல்லோரும் கூட்டாக சேர்ந்து தொழுது ஓதிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல், பயான்கள் சொல்வது அதை அவர்களும் எப்படியெல்லாம் பேசி பழகுவது, இஸ்லாமிய விஷயங்கள் சம்பந்தபட்ட வகையில் சில ஆக்டிவிட்டீஸ் என செய்து குழந்தைகளை மிகவும் உற்ச்சாகப்படுத்தி ஆர்வமூட்டி வருகிறார்கள்.இது மட்டும் அல்லாது… தற்போதைய ஒரு மாத காலமாக குர்ஆன் ஓதும் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் ஸ்பெஷல் க்ளாஸாக புதன்கிழமை தோறும் மாலை ஒரு மணிநேரம் நடத்திவருகின்றார்கள்.அதன்பிறகு மக்ரிப் தொழுகைக்குபின்,சிறந்த தலைப்புகளில் பிள்ளைகளுக்கும்,பெரியவர்களுக்கும் புரியும்வண்ணம் பயான்கள் சொல்கின்றார் உஸ்தாத் ரஹ்மத்துல்லா என்பவர்.இவர்தான் இந்த இஸ்லாமிய வகுப்பு நடத்துவதற்க்கு தலைமை வகிப்பவர்.சிறந்த முறையில் செயல்படுத்தி கொண்டும் இருப்பது நன்கு தெரிய வருகின்றது.இது போன்று ஏழு இடங்களில் உள்ள பள்ளிகளிலுமே நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை கொடுத்தோம் என்ற திருப்தியோடு நமக்கும்,பள்ளிவாசல்களுக்கும் இடையே தூரம் அதிகமானாலும் இது போன்று அடிக்கடி சென்று நம் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவது என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தையும்,மனநிம்மதியையும் கொடுக்கின்றது.


நாம் இது போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவோ வெளியில் சுற்றுவது,அலங்கார பொருட்களை வாங்குவது,வெளியில் சாப்பிடுவது என நிறைய நேரங்களையும்,பணத்தையும் செலவழிக்கும் போது வாரத்திற்க்கு ஒரு முறையோ,இருமுறையோ நாம் இப்படி பள்ளிகளுக்கு சென்று நல்ல முறையில் நேரத்தை கழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்தானே…?இது போன்று நடைப்பெறும் வகுப்புகளுக்கு நாமும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்தோமேயானால் அவர்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும்.இந்த சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு சிலபேருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகலாம்.அதற்காகவே நான் இதை என் இல்லத்தில் பதிவு செய்கிறேன்.



எல்லாவல்ல இறைவன் எங்களுக்கு இதை நிலைக்க செய்திட தினம் தினம் இறைஞ்சுகிறேன்.







Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out