Saturday, December 6, 2014

வெப் கேக் (குக்கர் முறை)

இந்த குக்கர் கேக் செய்முறையை நான் ஊரில் இருக்கும் எனது உறவினர்களுக்காக செய்து பார்த்த முறை.... மைக்ரோவேவ்,ஓவன் இதெல்லாம் இருந்தால் தான் கேக் செய்யமுடியும் என்று இல்லாமல் இவ்வாறும் சுலபமாக செய்யலாம் என்று சொல்லி அவர்களும் செய்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.எனவே இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
 

தேவையான பொருட்கள்                   

மைதா  - 1 ¼ கப்

பட்டர்   - 50 கிராம்

பொடித்த சீனி – 1 1/2 கப்

முட்டை   - 2

கொகோ பவுடர்  - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி

பால்      - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்  - 2 மேசைக்கரண்டி

வெனிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி

உப்பு ( பேக் செய்ய) – 1 ½ (அ) 2 கப்


செய்முறை

பட்டர்,முட்டை,எஸன்ஸ்,பால் இவையெல்லாம் ரூம் டெம்பரேச்சரில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.ஐந்து லிட்டர் குக்கரில் உப்பை பரவலாக கொட்டி அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய தட்டோ வைத்து மூடியில் லப்பரோ,வெய்ட்டோ போடாமல் குக்கரை மூடி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு படுத்த வைக்கவும்.ஒரு சில்வர் அல்லது சுதேசி பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்க்கு உள்ளதை எடுத்து அதன் உள்ளே வெண்ணெயை உள் அடி பாகமும்,சுற்றிலும் தடவி விட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு மைதாவை போட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டும் அளவிற்கு சுத்தி தட்டி விடவும்.ஒட்டியது போக மிச்சம் இருப்பின் மாவை கொட்டி விடவும்.


மைதாவையும்,பேக்கிங் பவுடரையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலப்பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியை போட்டு எலெக்ட்ரிக் அல்லது ஹாண்ட் விஸ்க்கால் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.இப்போது அதில் வெனிலா எஸன்ஸ்,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு,கொஞ்சம் கொஞ்சமாக மாவையும் பாலையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வைக்கவும்.


மற்றுமொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கொக்கோ பவுடரை கட்டியில்லாமல் கலந்துக் கொண்டு,அதில் கலந்து வைத்திருக்கும் கலவையில் பாதியை அதில் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் கலந்து விட்டு வைக்கவும்.வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொக்கோ கலவையில் சின்ன குழி கரண்டியால் எடுத்து மெதுவாக நடுவே ஊற்ற வேண்டும். இன்னொரு குழிக் கரண்டியால் வெள்ளை கலவையை அதன் மேலே மெதுவாக ஊற்றவும்.இப்படியே மாற்றி மாற்றி முழுவதுமாக ஊற்றி விட்டு பாத்திரத்தை தட்டி சமபடுத்திவிட்டு,குக்கரை திறந்தால் சூடு வந்திருக்கும்.அதன் உள்ளே மெதுவாக வைத்து மறுபடியும் குக்கரை மூடி வைக்கவும்.முதல் 40 நிமிடம் வரை குக்கரை திறக்க கூடாது.அதன் பிறகு திறந்து பார்த்தால் நன்கு உப்பியிருக்கும் அதன் நடுவே ஒரு குச்சியை தண்ணியில் கழுவி விட்டு குத்தி வெளியே எடுத்துப் பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும்.அப்படியிருப்பின் அடுப்பை அணைத்து விடவும்.இல்லை கொஞ்சம் பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டி இருந்தால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வைத்து விட்டு,அதன் பின் சரிப்பார்த்துவிட்டு இறக்கவும்.


பாத்திரத்தை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கத்தியால ஓரத்தை ஒரு முறை சுத்தி தளர்த்திவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்தால் அழகாக வந்து விடும்….
இதை அப்படியே துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.மிகவும் டேஸ்டாக இருக்கும்.இல்லையென்றால் ஐஸிங் செய்து அலங்கரித்து சாப்பிடலாம்.ஐஸிங் முறையை அடுத்த பதிவில் பார்க்கவும்.

 குறிப்பு:-

1.இதே குக்கர் செய்முறையில் எல்லாவிதமான கேக்கும் செய்யலாம்.நன்கு மிருதுவாக வரும்.பிஸ்கட்டும் செய்யலாம்.அதன் குறிப்பை பின்பு போடுகின்றேன்.

2.சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் மில்க்மெய்ட் ஊற்றி செய்யலாம்.அதற்க்கேற்றார் போல் இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லை எக் ரீப்ப்ளேஸர் என்று கிடைக்கின்றது அதையும் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3.மாவை மாற்றி மாற்றி ஊற்றியப்பின் ஒரு கத்தியால் டிசைனுக்காக வெப் போல் ஆங்காங்கே இழுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்துள்ளேன்.இதுவே அப்படியே இழுத்து விடாமலும் வைக்கலாம். அது ஜீப்ரா டிசைனாக இருக்கும்.அப்படி செய்ததில் ஒரு பீஸ் இதோ உங்கள் பார்வைக்கு....





Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out