Monday, August 24, 2015

செட்டிநாடு சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு பெரும்பாலும் ஒரே செய்முறையில் செய்வது வழக்கம் என்றாலும்,ஒரு சில ஊர்களில் செய்யும் செய்முறை பலரையும் கவரும்படி இருக்கும்.
அதிலும் செட்டிநாடு ஸ்பெஷல் உணவு என்பது நம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்... அதில் பலவகை சமையல் குறிப்புகள் உண்டு... அப்படி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் செய்து காண்பிக்கப்பட்ட சிக்கன் குழம்பு செய்முறை என்னை மிகவும் கவர்ந்தது.... அந்த முறையில் செய்தும் பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... பலருக்கும் தெரிந்திருந்திருக்கலாம்...
இருப்பினும் தெரியாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்குமல்லவா? அதுவுமில்லாமல் ஒரே செய்முறையில் செய்யாது இப்படி மாற்றி செய்து பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்...
சரி வாங்க செய்முறைக்கு போவோம்....


                 செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்
**********. ***************
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி(tsp)
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி(tsp)
மல்லித்தழை - சிறிதளவு




வறுத்து அரைக்க:-)
****************
சின்ன வெங்காயம் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி(tsp)
பட்டை - இரண்டு இன்ச் அளவு - 2
கிராம்பு - 3
காய்ந்த மிளகாய் - 4
பச்சைமிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு இன்ச் அளவு - 3 துண்டுகள்
பூண்டு - 10 பல்
மிளகு - 2 தேக்கரண்டி(tsp)
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி(tbsp)
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
தாளிக்க;
*******
எண்ணெய் - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1



செய்முறை:-)
************



ஒரு வானலியில் நல்லெண்ணெயை ஊற்றி வறுக்க கொடுத்தவற்றில் பட்டை கிராம்பு முதலில் போட்டு பின்பு சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு பொன்னிறமாகி வாசம் வந்ததும்,சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அறிந்து சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதுமே நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதுவும் வாசம் வரும்போது தேங்காய் துருவல்,மிளகு சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின் கறிவேப்பிலை இலைகளையும், மல்லித்தூளையும் சேர்த்து நன்கு பிரட்டி வாசம் வர வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொறிந்ததும், அரிந்த வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.வதங்கியதும்,தக்காளியை அரிந்து சேர்த்து வதக்கி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,கழுவி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதங்கவிடவும்.
கோழி வதங்கும் நேரம் ஆற வைத்திருக்கும் வறுத்தவற்றை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
இப்போது வதங்கிய கோழியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மல்லிதழை நறுக்கி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
சுவையான மணமான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்....


***இது நெய் சாதம்,பரோட்டா,சப்பாத்தி,இடியாப்பம் இவற்றிற்கு சூப்பராக இருக்கும்...***


No comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out